search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அரசு முத்திரை"

    மயிலம் அருகே தழுதாளி அரசு பள்ளியில் கர்நாடக மாநில முத்திரையுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். #FreeCycles
    மயிலம்:

    தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 2001-02-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் பின்னர் 2005-06-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டிலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆயிரத்து 524 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் ஒருசில மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில் முன் பகுதியில் கூடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் வட்டவடிவில் கன்னட மொழியில் உள்ள முத்திரை காணப்பட்டது. மாணவி படிப்பது போன்ற படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழில் பொது கல்வித்துறை கர்நாடக அரசு என்று பொருளாகும்.

    கர்நாடக முத்திரை இருப்பதை கண்டு மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-


    தமிழகத்தைபோல் கர்நாடகத்திலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மாணவர்களுக்கு வழங்க அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. அந்த சைக்கிளை பரிசோதித்து சென்று பார்த்ததில் தரமற்றிருப்பது தெரியவந்தது. மேலும் இது எளிதில் துருபிடிக்கும் சைக்கிள்களாகவும் இருந்தது.

    இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை தற்போது தழுதாளி பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பின்னர் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதையடுத்து சைக்கிள்களை மாணவர்கள் வாங்கிச்சென்றனர்.

    இதுபற்றி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்ட போது, இந்த சைக்கிள் எவ்வாறு இங்கு வந்தது? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் இதுபோன்ற முத்திரையுடன் எத்தனை சைக்கிள்கள் வந்தள்ளது? என்கிற விவரங்களை சேகரித்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளோம். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அரசால் கொள்முதல் செய்து தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் அனைத்தையும் அரசு பரிசோதித்தது. இவை அனைத்தும் தரமானது என தெரிந்த பின்னர்தான் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சைக்கிள்கள் தரமற்றவை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. சைக்கிள்கள் கொள்முதல் செய்யும்போது அதில் அந்த ஸ்டிக்கர் மட்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அவை நீக்கப்படும்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    கர்நாடக முத்திரையிடப்பட்ட சைக்கிள் தமிழகத்துக்கு வந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சைக்கிள் வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட சைக்கிள்களில் கன்னட மொழி மற்றும் படம் உள்ள சைக்கிள்களை பிரித்தெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #FreeCycles
    திண்டிவனம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #CVeshanmugam
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அதில், சில சைக்கிள்களின் முன்புறத்தில் இருந்த கூடையில், வட்டவடிவில் இருந்த முத்திரையில் மாணவி படிப்பது போன்ற படத்துடன், கன்னட மொழியில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் முத்திரை இல்லாமல், கர்நாடக அரசின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதற்கிடையே இந்த சைக்கிள் பற்றி அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. கர்நாடக மாநில அரசு சார்பில், அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கிய சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.  #CVeshanmugam

    ×